காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தியிடம் ஒரு ஆலோசனை சொல்லப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படியா? சரி.. நான் யோசித்து பதில் சொல்கிறேன் என்று அவர் பதில் சொல்கிறார் என்றால் அவர் தன்னுடைய அரசியல் செயலர் அகமது படேலிடம் கலந்து பேசிவிட்டு முடிவெடுக்கப்போகிறார் என்று அர்த்தம்.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை சோனியா, அவரது குடும்பத்தினருக்கு அடுத்தபடியாக நம்புவது அக்கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான அகமது படேலைத்தான். அவரும் பல ஆண்டுகளாக சோனியாவின் நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமானவராகச் செயல்பட்டுவருகிறார்.
சோனியா காந்தி அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்தே படேல் அவரது நம்பிக்கைக்கு உரியவராக இருந்துவருகிறார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளம் காங்கிரஸ் பிரமுகராக இந்திராவின் நம்பிக்கையைப் பெற்ற அகமது படேல், 1977-ல் பரூச் தொகுதியின் எம்பியாக போட்டியிட்டு வென்றார். இந்திரா மரணத்துக்குப் பின்னர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற முறையிலும் இந்திராவுக்கு வேண்டியவர் என்ற முறையிலும் ராஜிவ் காந்தி, அவரை பொதுச்செயலாளர் பதவிக்கு நியமித்தார். அத்துடன் பரூச், ராஜிவின் தந்தை பெரோஸ் காந்தியின் சொந்த ஊரும் கூட. அகமது படேல் ஜவஹர் பவன் அறக்கட்டளையின் செயலாளராக நியமிக்கப்பட்டபோதுதான் முதல்முதலில் சோனியாவைச் சந்திக்கிறார். ராஜிவ் மரணத்துக்குப் பின்னால் சோனியா அரசியலில் இறங்க தயங்கிக்கொண்டிருந்த காலம் அது. ஆனால் இந்த அறக்கட்டளை சமாச்சாரங்களில் பங்கெடுத்து வந்தார். படேல் முழுமனதுடன் பணியாற்றியதுடன் நிதி திரட்டவும் உதவினார். சோனியா விரும்பியபடி ராஜிவ் அறக்கட்டளை நிறுவியதிலும் படேலுக்குப் பங்கு உண்டு. ராஜிவ் மரணத்துக்குப் பின் ராகுல், பிரியங்கா போன்றோரின் கல்வி, பாதுகாப்பு, நிதி ஆதாரங்கள் ஆகியவற்றை படேல்தான் முன்னின்று கவனித்தார் என்று சொல்லப்படுகிறது.
பின்னர் காங்கிரசின் பொருளாளர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது. அரசியலில் சோனியா இறங்க முடிவு செய்தபோது, சீதாராம் கேசரியைக் கவிழ்த்துவிட்டு சோனியாவை கட்சித்தலைவர் ஆக்குவதில் அகமது படேல் பங்கும் இருந்தது. அதன் பின்னர் கட்சிக்குள் அவரது முக்கியத்துவம் மேலும் வளர்ந்தது. இருப்பினும்சோனியாவின் அப்போதைய செயலாளர் ஜார்ஜுடன் ஏற்பட்ட சிக்கலால் அவர் காங்கிரஸ் பொருளாளர் பதவியைத் துறந்தார். இருந்தாலும் விரைவில் சோனியாவின் நம்பிக்கையை மீண்டும் பெற்றுவிட்டார்.
“எக்காலத்திலும் சோனியாவின் நம்பிக்கைக்குப் பங்கம் விளைவிக்கும்படி அவர் நடந்துகொண்டதில்லை. ஐமுகூட்டணி ஆட்சியில் இருந்தபோது பிரதமரை விட அதிக செல்வாக்கு கட்சியில் அவருக்கு இருந்தது. சுயலாபத்துக்காக அவர் எதையும் செய்தார் என்று விரல்கள் அவரை நோக்கி நீண்டதில்லை. உண்மையில் கடந்த பத்தாண்டு ஆட்சியில் எடுக்கப்பட்ட எந்தவொரு முடிவும் அகமது படேல் அறியாமல் எடுக்கப்பட்டிருக்க இயலாது. சோனியா காந்தியின் அரசியல் மூளை இவர்தான்” என்கிறார் ஓர் அரசியல் விமர்சகர்.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அவரிடம் ஊடக ஆலோசகராகப் பணிபுரிந்த சஞ்சயா பாரு அந்த அனுபவம் பற்றி ஒரு நூல் எழுதி உள்ளார். மந்திரிசபை மாற்றங்களின் போது அடிக்கடி பிரதமர் இல்லம் வருவாராம் படேல். ஒருமுறை மந்திரிசபை மாற்றத்துக்கான பட்டியல் பிரதமர் இல்லத்தில் தயாராகி விட்டது. குடியரசுத் தலைவரும் பட்டியலைப் பெற காத்திருந்தார். கடைசி நிமிடத்தில் உள்ளே வந்த படேல், அதில் இடம்பெற்றிருந்த ஒரு பெயரை அடித்துவிட்டு இன்னொரு பெயரைச் சேர்க்கச் சொன்னார். எங்கிருந்து அந்த பெயர் சொல்லப்பட்டிருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். எனவே புதிதாக பட்டியலை தட்டச்சு செய்தால் நேரமாகும் என்று குறிப்பிட்ட பெயர் மட்டும் அழிப்பானால் அழிக்கப்பட்டு, புதிய பெயர் தட்டச்சிடப் பட்டது என்கிறார் சஞ்சயா பாரு.
அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு இந்திரா, ராஜிவ், ராகுல்காந்தி வரை கேட்டும் படேல் மறுத்துவிட்டார். ஊடகங்கள், பெரு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் என எல்லா இடங்களிலும் இவருக்கு நண்பர்கள் உண்டு. காரியங்களை சாதிக்க இவரது தொடர்புகளே உ தவுகின்றன. குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக 1986-ல் இவர் இருந்திருக்கிறார். அதன் பின்னர் டெல்லிக்கு வந்துவிட்டாலும் குஜராத் காங்கிரஸில் கடந்த 25 ஆண்டுகளாக அகமது படேல் சொன்னதுதான் சட்டம். அங்கே காங்கிரசின் வீழ்ச்சிக்காக இவரை விமர்சிப்பவர்களும் உண்டு.
சோனியாவின் கையில் இருந்து அதிகாரம் ராகுலுக்கு முழுவதும் மாறும்போது அகமது படேலின் செல்வாக்கில் சரிவு ஏற்படக்கூடும். ஆனாலும் அவர் ஒரு விசுவாசமான காங்கிரஸ் தலைவராக தொடர்வார் என்பதில் இப்போதைக்கு சந்தேகம் இல்லை.
டிசம்பர், 2015.